Loading...

வெள்ளை போக்கை கட்டுப்படுத்தும் காட்டு துளசி

ht4063

துளசியை போன்ற மணம் உடையது காட்டு துளசி. ஓசிமம் சாண்டம் என்ற தாவர பெயரை பெற்றிருக்கக் கூடிய இந்த செடி மிகுந்த மருத்துவ குணம் கொண்டதாக விளங்குகிறது. இதன் சாறு உடலுக்கு ஊக்கம் தருவதாக, உள் உறுப்புகளை தூண்டிக் கூடியதாக வேலை செய்கிறது.

இதன் பூக்கள் மெல்லிய ஊதா நிறத்தை உடையதாக காணப்படுகிறது. இதற்கு நாட்டுப்புறங்களில் நாய் துளசி என்ற பெயரும் உள்ளது. இதன் வாசனை கொசுக்களை விரட்டக் கூடிய தன்மை கொண்டதாக உள்ளது. மேலும் பூச்சிகள், எறும்புகள் போன்றவற்றை அண்ட விடாமல் செய்கிறது. இதை பயன்படுத்தி இயற்கையான தன்மை கொண்ட கொசு வர்த்திகள் தயாரிக்கவும் இந்த காட்டு துளசி பயன்படுகிறது.

அதே போல் குளியல் சோப்பில் இதன் எண்ணெய் சேர்த்து மூலிகை குணத்துடன் தயாரிக்கப்படுகிறது. அதே போல் பற்பசைகளிலும் இந்த காட்டு துளசியின் சாறு சேர்க்கப்படுகிறது. இதன் சாறு வயிற்று கோளாறு அனைத்துக்கும் சிறந்த மருந்தாகிறது. மேற்பூச்சு மருந்தாக இதை பயன்படுத்துவதன் மூலம் வீக்கத்தை கரைப்பதாக, வலியை போக்கக் கூடியதாக இது அமைகிறது. மேலும் நுண் கிருமி தொற்றுகளை போக்கக் கூடியதாக இது விளங்குகிறது.

சிறுநீரை பெருக்குகிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. காட்டு துளசியை பயன்படுத்தி பெண்களுக்கு ஏற்படக் கூடிய வெள்ளை போக்கு மற்றும் சர்க்கரை நோயாளிகள் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளக் கூடிய மருந்து ஒன்றை தயார் செய்யலாம்.
இதற்கு தேவையான பொருட்கள் காட்டு துளசியின் விதைகள், பால். காட்டு துளசியின் விதைகளை 10 முதல் 30 கிராம் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் நீர் சேர்த்து கஷாயம் தயார் செய்து கொள்ள வேண்டும்.

வெள்ளை போக்கை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தும் போது பனங்கற்கண்டு சேர்த்து இந்த கஷாயத்தை தயார் செய்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டை தவிர்த்து விட்டு இந்த கஷாயத்தை தயார் செய்து பருகி வர வேண்டும். ஒரு வேளைக்கு 10 கிராம் அளவுக்கு அல்லது நாள் ஒன்றுக்கு 30 கிராம் அளவுக்கு இதை எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை போக்கை கட்டுப்படுத்தும் குணம் இதற்கு உள்ளது. சர்க்கரை நோயை தணிக்கக் கூடியதாகவும் அமைகிறது.

கணையத்தை தூண்டி நன்றாக செயல்பட உதவுகிறது. இந்த கஷாயத்தை தயார் செய்து அதனுடன் காய்ச்சிய பாலை சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். காட்டு துளசியின் இலைகளை பயன்படுத்தி காய்ச்சல் இருமல் ஆகியவற்றை போக்கக் கூடிய ஒரு உள்மருந்தை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் காட்டு துளசியின் இலைகள், ஏலக்காய், இலவங்கம், தேன். காட்டு துளசியின் இலைகள் மற்றும் பூக்களையும் சேர்த்து இதற்கு பயன்படுத்தலாம். ஒரு டம்ளர் கஷாயத்திற்கு ஒரு கைபிடி அளவு இலைகள் மற்றும் பூக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதனுடன் ஒரு ஏலக்காயை சேர்க்க வேண்டும். சிறிதளவு பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். இரண்டு இலவங்கம் (கிராம்பு) சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை கொதிக்க வைத்து எடுத்து வடி கட்டிக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் உப்புசம், காய்ச்சல், இருமல் போன்றவற்றை இந்த கஷாயம் கட்டுப்படுத்துகிறது. குழந்தைகளுக்கு காலை மாலை என இருவேளைகளில் 20 மிலி வரை கொடுக்கலாம். பெரியவர்கள் 50 மிலி வரை எடுத்துக் கொள்ளலாம்.இவ்வாறு காட்டு துளசி பல்வேறு நலம் தரும் மருத்துவ குணங்களை கொண்டதாக விளங்கி நமக்கு பயன் அளிக்கிறது.

Loading...
104
-